திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.59 திருவெண்ணியூர் - திருத்தாண்டகம்
தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந்
    தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்
புண்டரிகத் தயனொடுமால் காணா வண்ணம்
    பொங்குதழற் பிழம்பாய புராண னாரும்
வண்டமரும் மலர்க்கொன்றை மாலை யாரும்
    வானவர்க்காய் நஞ்சுண்ட மைந்த னாரும்
விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
1
நெருப்பனைய மேனிமேல் வெண்ணீற் றாரும்
    நெற்றிமே லொற்றைக்கண் நிறைவித் தாரும்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லாரும்
    பூந்துருத்தி நகர்மேய புராண னாரும்
மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்
    வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்
விருப்புடைய அடியவர்தம் முள்ளத் தாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
2
கையுலாம் மூவிலைவே லேந்தி னாருங்
    கரிகாட்டி லெரியாடுங் கடவு ளாரும்
பையுலாம் நாகங்கொண் டாட்டு வாரும்
    பரவுவார் பாவங்கள் பாற்று வாருஞ்
செய்யுலாங் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
    திருப்புன்கூர் மேவிய செல்வ னாரும்
மெய்யுலாம் வெண்ணீறு சண்ணித் தாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
3
சடையேறு புனல்வைத்த சதுர னாருந்
    தக்கன்றன் பெருவேள்வி தடைசெய் தாரும்
உடையேறு புலியதள்மேல் நாகங் கட்டி
    உண்பலிக்கென் றூரூரி னுழிதர் வாரும்
மடையேறிக் கயல்பாய வயல்கள் சூழ்ந்த
    மயிலாடு துறையுறையும் மணாள னாரும்
விடையேறு வெல்கொடியெம் விமல னாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
4
மண்ணிலங்கு நீரனல்கால் வானு மாகி
    மற்றவற்றின் குணமெலா மாய்நின் றாரும்
பண்ணிலங்கு பாடலோ டாட லாரும்
    பருப்பதமும் பாசூரும் மன்னி னாருங்
கண்ணிலங்கு நுதலாருங் கபால மேந்திக்
    கடைதோறும் பலிகொள்ளுங் காட்சி யாரும்
விண்ணிலங்கு வெண்மதியக் கண்ணி யாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
5
வீடுதனை மெய்யடியார்க் கருள்செய் வாரும்
    வேலைவிட முண்டிருண்ட கண்டத் தாருங்
கூடலர்தம் மூவெயிலு மெரிசெய் தாருங்
    குரைகழலாற் கூற்றுவனைக் குமைசெய் தாரும்
ஆடுமர வரைக்கசைத்தங் காடு வாரும்
    ஆலமர நீழலிருந் தறஞ்சொன் னாரும்
வேடுவனாய் மேல்விசயற் கருள்செய் தாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
6
மட்டிலங்கு கொன்றையந்தார் மாலை சூடி
    மடவா ளவளோடு மானொன் றேந்திச்
சிட்டிலங்கு வேடத்தா ராகி நாளுஞ்
    சில்பலிக்கென் றூரூர் திரிதர் வாருங்
கட்டிலங்கு பாசத்தால் வீச வந்த
    காலன்றன் கால மறுப்பார் தாமும்
விட்டிலங்கு வெண்குழைசேர் காதி னாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
7
செஞ்சடைக்கோர் வெண்டிங்கள் சூடி னாருந்
    திருவால வாயுறையுஞ் செல்வ னாரும்
அஞ்சனக்கண் அரிவையொரு பாகத் தாரும்
    ஆறங்கம் நால்வேத மாய்நின் றாரும்
மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
    மதிலாரூர் புக்கங்கே மன்னி னாரும்
வெஞ்சினத்த வேழமது வுரிசெய் தாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
8
வளங்கிளர்மா மதிசூடும் வேணி யாரும்
    வானவர்க்கா நஞ்சுண்ட மைந்த னாருங்
களங்கொளவென் சிந்தையுள்ளே மன்னி னாருங்
    கச்சியே கம்பத்தெங் கடவு ளாரும்
உளங்குளிர அமுதூறி அண்ணிப் பாரும்
    உத்தமராய் எத்திசையும் மன்னி னாரும்
விளங்கிளரும வெண்மழுவொன் றேந்தி னாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
9
பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை சூடிப்
    புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்
கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்
    குளிரார்ந்த செஞ்சடையெங் குழக னாருந்
தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துந்
    திருவிரலா லடர்த்தவனுக் கருள்செய் தாரும்
மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்
    வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com